குரோம்பேட்டையில் ஆகாயத்தாமரை செடிகளால் அழிந்து வரும் வீரராகவன் ஏரி

குரோம்பேட்டையில் ஆகாயத்தாமரை செடிகளால் அழிந்து வரும் வீரராகவன் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பது இந்த பகுதி ெபாதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Update: 2023-03-06 07:03 GMT

சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் வீரராகவன் ஏரி உள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் திருநீர்மலை பேரூராட்சி பராமரிப்பில் ஏரி இருந்தபோது எந்த புனரமைப்பு பணிகளும் நடைபெறாமல் ஏரி மாசடைந்து வந்தது. பல்லாவரம் நகராட்சியாக இருந்தபோது பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டாலும் இந்த ஏரியை சுற்றி கழிவுநீர் ஏரியில் கலப்பது இன்னும் தடைபடவில்லை.

ஏரியை சுற்றியுள்ள லட்சுமிபுரம், நியூ காலனி, கக்கிளஞ்சாவடி என ஏரியின் அனைத்து பகுதிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மற்றொருபுறம் ஏரியை சுற்றியுள்ள லட்சுமிபுரம், துர்காநகர், நியூ காலனி பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் பல ஆண்டுகளாக கலந்து வருவதால் ஏரி பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. தற்போது ஆக்கிரமிப்புகளால் ஏரி சுருங்கி, கழிவுநீர் குட்டையாக மாறி வருவதுடன், ஆகாயத்தாமரை செடிகளால் ஏரி அழிந்து வரும் நிலையில் உள்ளது.

ஏரியை சுற்றி குடியிருப்புகள் பெருகிவிட்ட நிலையில் நிலத்தடி நீர் தேவைக்கு வீரராகவன் ஏரி முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது. எனவே ஏரியில் நிறைந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி, ஏரியில் இருக்கும் கழிவுநீரை வெளியேற்றிவிட்டு, வரும் மழைக்காலத்தில் மழைநீரை சேகரித்து வைக்கும் அளவுக்கு ஏரியை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பது இந்த பகுதி ெபாதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்