சிறந்த சுற்றுலா கிராமமாக வேட்டைக்காரன்புதூர் தேர்வு-மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு
தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக வேட்டைக்காரன்புதூர் தேர்வு செய்யப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு விருது வழங்கி கவுரவித்து உள்ளது.;
ஆனைமலை
தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக வேட்டைக்காரன்புதூர் தேர்வு செய்யப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
சிறந்த சுற்றுலா கிராமம்
தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேர்வு செய்ய மத்திய சுற்றுலா அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இதையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் சிறந்த சுற்றுலா கிராம போட்டி தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேர்வு செய்து சுற்றுலா வளர்ச்சி கழகம் விண்ணப்பத்தை அனுப்பியது. கோவை மாவட்டத்தில் வேட்டைக்காரன்புதூர் கிராமம் சிறந்த கிராமமாக தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு 795 விண்ணப்பங்கள் வந்தன.
விருது
இதில் 2023-ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா கிராமமாக வேட்டைக்காரன்புதூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரி அஜய் பட், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலாவிடம் வழங்கினார். அப்போது சுற்றுலாத்துறை செயலாளர் வித்யாவதி உடன் இருந்தார்.
இதுகுறித்து கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறுகையில், வேட்டைக்காரன்புதூர் கிராமத்தில் உள்ள மக்களின் கலாசாரம், பராம்பரியம், சுகாதாரம், கோவில்கள், விவசாயம் உள்ளிட்டவைகளை மையப்படுத்தி சுற்றுலா அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது. விண்ணப்பத்தை ஆய்வு செய்து சிறந்த சுற்றுலா கிராமமாக வேட்டைக்காரன்புதூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.