வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

Update: 2023-01-22 10:24 GMT

செய்யாறு

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழா

செய்யாறு டவுன் திருவோத்தூரில் பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை மறுதினம் கொடியேற்றத்துடன் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் மேற்கொண்டதால் பிரம்மோற்சவ விழா நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ரதசப்தமி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலை கோவில் கொடி மரத்திற்கு அலங்காரம், ஆராதனை செய்து சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓத கொடியேற்றப்பட்டது. இதையடுத்து மகாதீபாராதனை நடந்தது.

இதில். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. முதல் நாளான இன்று கற்பக விருட்ச காமதேனு வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தேரோட்டம்

நாளை (திங்கட்கிழமை) காலை சூரிய பிரபை உற்சவம், இரவு சந்திர பிரபை உற்சவமும், 24-ந் தேதி இரவு பூத வாகன சேவையும், 25-ந் தேதி இரவு பெரிய நாக வாகன சேவையும், 26-ந் தேதி காலை அதிகார நந்தி வாகன சேவை புறப்பாடும், இரவு பெரிய ரிஷப வாகனத்தில் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் காட்சியளித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

27-ந் தேதி காலை சந்திரசேகர சுவாமி அபிஷேகம், 63 நாயன்மார்கள் திருவீதி உலாவும், இரவு அம்மன் தோட்ட உற்சவம், திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண யானை வாகன சேவை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 28-ந் தேதி நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை சந்திரசேகர் சுவாமி திருவீதி உலாவும், இரவு குதிரை வாகன சேவையும், 30-ந் தேதி அதிகார நந்தி வாகன சேவையும் நடைபெறுகிறது.

தீர்த்தவாரி

பிரம்மோற்சவ விழாவின் இறுதி நாளான 31-ந் தேதி காலை நடராஜர் திருவீதி உலாவும், மாலை 3 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரவு கொடி இறக்கமும்,ராமேஸ்வர திருக்கைலாய சேவை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்