ராஜராஜேஸ்வரி அம்மன் சூரனை வதம் செய்தார்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி தசரா திருவிழாவில் ராஜராஜேஸ்வரி அம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தார்.

Update: 2022-10-06 17:58 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி தசரா திருவிழாவில் ராஜராஜேஸ்வரி அம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தார்.

கலைவிழா

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் ராமலிங்க விலாசம் அரண்மனையில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி கலை விழா கடந்த 9 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப் பட்ட இந்த கோவில் நவராத்திரி திருவிழா மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையை போல மன்னர்கள் காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்தக்காலம்தொட்டு மன்னரையும் மக்களையும் ஓரணியில் கூடவைக்கும் கோலாகல திருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்த இந்த நவராத்திரி கலைவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளும், நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரம்

விழாவின் நிறைவாக தசரா பண்டிகையையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். முன்னதாக ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள குண்டுக்கரை முருகன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி, முத்துராமலிங்க சுவாமி திருக்கோவில், கோதண்டராமர் கோவில், கோட்டைவாசல் விநாயகர் கோவில், முத்தால பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலய உற்சவ மூர்த்திகள் அரண்மனை பகுதியில்வந்து சேர்ந்து வரிசையாக அணிவகுத்து நிற்க ராஜ ராஜேஸ்வரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அரண்மனை வாசலுக்கு வந்தடைந்தார்.

அங்கிருந்து சாலையின் இருபுறமும் பக்தர்கள், திரண்டு நிற்க சாமிகளின் ஊர்வலம் பக்திபரவசத்துடன் நடைபெற்றது.

பல்வேறு இடங்களில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மகர்நோன்பு திடலை சென்றடைந்து அங்கு ராஜராஜேஸ்வரி அம்மன் மகிஷாசுர மர்த்தினி திருக்கோலத்தில் சூரனை அம்பு எய்து வதம் செய்த அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், ராமநாதபுரம் சமஸ்தானம் பரம்பரை அறங்காலவர் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உள்பட நகர் முக்கிய பிரமுகர்களும், ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தபெருமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஏற்பாடு

ஏற்பாடுகளை ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ் வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்திருந்தனர். விழாவையொட்டி ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் மேற்பார்வையில் சாமி ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்