பெண்ணுக்கு ரத்த நாள அறுவை சிகிச்சை செய்து சாதனை

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ரத்த நாள அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்து உள்ளனர்.

Update: 2022-12-21 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ரத்த நாள அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்து உள்ளனர்.

அரிவாள் வெட்டு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த எமரால்டு பகுதியை சேர்ந்தவர் சகுந்தியா (வயது 28). இவர் கடந்த 13-ந் தேதியன்று விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கவனக்குறைவாக இடது கையில் அரிவாளால் வெட்டி கொண்டார். இதனால் சகுந்தியாவுக்கு அதிக ரத்தபோக்கும், வலியும் ஏற்பட்டது. இதையடுத்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், இடது கையில் ஆழமான வெட்டு காயங்கள் இருந்தது. மேலும் தசைநார்கள் கிழிந்தும், கைக்கு செல்லும் முக்கிய ரத்த குழாய் முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அவரது கையின் ஒரு பாதி உணர்ச்சி இல்லாமலும், கை அசைவுகள் குறைந்தும் இருந்தது. இதன் காரணமாக உடனடியாக சகுந்தியாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை

இதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை நிபுணரும், தலைமை டாக்டருமான கார்த்திகேயன் தலைமையில் டாக்டர்கள் ராஜேஷ், அசோக் விக்னேஷ், சரண்யா ஆகியோர் அடங்கிய குழுவினரால் சகுந்தியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 3½ மணி நேரம் நடந்த சிகிச்சையில் அறுபட்ட ரத்தகுழாய் சரி செய்யப்பட்டது. மேலும் நரம்பும், தசையும் சரி செய்யப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது. தற்போது சகுந்தியா உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி கூறுகையில், ரத்த குழாயில் செய்யப்படும் நுண் அறுவை சிகிச்சை பெங்களூர், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமே நடந்து வந்தது. ரத்த நாளங்களில் செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சை நீலகிரி மாவட்டத்தில் தற்போது தான் முதல் முறையாக செய்யப்பட்டு உள்ளது.

வெற்றிகரமாக சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள். வெட்டுக்காயம் அடைந்த பெண் நன்றாக குணமடைந்து விட்டதால், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றார். அவருடன் அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவர் ரவிசங்கர் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்