வருசநாடு கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
முறைகேடுகள் நடப்பதாக கூறி வருசநாடு கூட்டுறவு சங்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.;
பயிர் கடன் தள்ளுபடி
வருசநாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடிக்கு 627 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 300 பயனாளிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 327 பயனாளிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இது தொடர்பாக வருசநாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம், கூட்டுறவு சங்க அலுவலக முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடன் தள்ளுபடி தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கூட்டுறவு சங்கத்தில் நகை மற்றும் விவசாய கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் வருசநாடு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலை வருசநாடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டுறவு சார்பதிவாளர் சவுந்தரராஜன் மற்றும் வருசநாடு போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் முறைகேடுகளில் ஈடுபட்ட வருசநாடு கூட்டுறவு வங்கி பணியாளர் மற்றும் தேனி மாவட்ட இணை பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டுறவு அலுவலகத்தில் மாடு பராமரிப்பு மற்றும் விவசாய கடன் வழங்குவதற்கு விவசாயிகளிடம் வசூல் வேட்டை நடத்தப்படுவதாகவும், நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 280 விவசாயிகளிடம் 10 சதவீதத்திற்கு மேல் கமிஷன் பெறப்பட்டதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பயிர்கடன் தள்ளுபடி குறித்து அரசுக்கு தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என சார்பதிவாளர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வருகிற 5-ந்தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.