தேனியில் பசுமையை பாதுகாக்க பல்வேறு செயல்திட்டங்கள்:1,000 பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க இலக்கு:கலெக்டர் ஷஜீவனா சிறப்பு பேட்டி

தேனி மாவட்டத்தில் பசுமையை பாதுகாக்க பல்வேறு செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், 1,000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.;

Update: 2023-10-06 18:45 GMT

கலெக்டர் பேட்டி

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா 'தினத்தந்தி' நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- மாநாட்டில் தேனி மாவட்டத்துக்கு என்று முதல்-அமைச்சர் சிறப்பு உத்தரவுகள், ஆலோசனைகள் எதுவும் வழங்கினாரா?

பதில்:- தேனி மாவட்டத்துக்கு என்று சிறப்பு உத்தரவுகள் எதுவும் வழங்கவில்லை. வளர்ச்சிப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை கிடப்பில் போடக்கூடாது. மக்கள் கோரிக்கை வைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், தொழில் மையம் மூலம் வழங்கும் கடன்களை சரியான நேரத்தில் வழங்க வேண்டும். கூட்டுறவுத்துறை சார்பில் பயிர்க்கடன், நகைக்கடன்களை அதிக அளவில் வழங்க வேண்டும்.

போலீஸ் துறையுடன் இணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பிளஸ்-2 முடிக்கும் அரசு பள்ளி மாணவிகள் அனைவரும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் வகையிலும், அவர்கள் உயர்கல்வியை தொடரும் வகையிலும் ஊக்குவிக்க வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை முதல்-அமைச்சர் பிறப்பித்தார். தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 22 சதவீதம் கூடுதல் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து அனைத்து பள்ளிகள் அளவிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் தான் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பசுமை மேம்பாடு

கேள்வி:- மாநாட்டில் முதல்-அமைச்சரிடம் பசுமை விருது பெற்று இருக்கிறீர்கள். மாவட்டத்தில் பசுமை மேம்பாட்டுக்கு எந்த மாதிரியான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன?

பதில்:- தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக 21 ஆயிரத்து 83 ஆய்வுகள் நடத்தி, 10 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் நடக்கும் ஊராட்சி தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டங்களிலும்

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 8 இடங்களில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் வைக்கப்பட்டு மஞ்சப்பை வழங்கப்பட்டு வருகிறது. கும்பக்கரை, தென்பழனி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து விட்டு அவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்படுகிறது. அரசு விழாக்களில் மஞ்சப்பை வழங்கி தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

எதிர்கால திட்டமாக நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சேராமல் தடுக்க உள்ளாட்சிகளில் சாக்கடை கால்வாய்களில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அவ்வாறு அகற்றப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து அவற்றை தூளாக்கி சாலை அமைக்கும் பணிகளுக்காக உள்ளாட்சிகள் மூலம் விற்பனை செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. மிகக்குறைந்த விலையில் மஞ்சப்பை கிடைப்பதற்கு என்ன செய்யலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா திட்டங்கள்

கேள்வி:- தேனி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா?

பதில்:- தேனி மீறுசமுத்திரம் கண்மாய், வைகை அணை, சுருளி அருவி உள்பட 10 இடங்களில் சுற்றுலா மேம்பாட்டு திட்டப் பணிகள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் 2 பரிந்துரைகள் விரைவில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

கேள்வி:- மலைக்கிராம மக்களின் நலன் காக்க செய்து வரும் பணிகள் என்ன?

பதில்:- மலைக்கிராம மக்களுக்கான சாலை வசதி, மருத்துவ வசதி, அத்தியாவசிய பொருட்கள் சரியாக கிடைக்கிறதா? என்று சிறப்பு கவனத்துடன் கண்காணிக்கப்படுகிறது.

குழந்தை திருமணம்

கேள்வி:- குழந்தை திருமணங்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

பதில்:- மாவட்டத்தில் குழந்தை திருமண ஏற்பாடுகள் அதிக அளவில் நடப்பதாக தெரிகிறது. தகவல் வரும் இடங்களில் உடனுக்குடன் சென்று அவை தடுத்து நிறுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 148 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 2 வாரத்துக்கு ஒருமுறை தன்னார்வலர்கள் மூலம் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக 1 மணி நேர விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகளை கண்டறிந்து மீண்டும் கல்வியை தொடர விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தொழில்முனைவோர்கள்

கேள்வி:- மகளிர் குழுக்களின் வாழ்வாதாரத்துக்கு செய்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன?

பதில்:- கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுவினர் மூலம் சிறுதானிய உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விரைவில் மகளிர் குழுவினரின் சிறுதானிய உணவகம் (மில்லட் கபே) தொடங்கப்பட உள்ளது. அனைத்து ஊராட்சி ஒன்றிய அளவிலும் இதுபோல் அமைக்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழுவினரை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்காக ஒவ்வொரு குழுவினருக்கும் ரூ.10 லட்சத்துக்கு குறையாமல் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து மாதந்தோறும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் சிறப்பு நடவடிக்கையாக 1,000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.

பருவமழை

கேள்வி:- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்:- ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அனைத்து துறை அலுவலர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏராளமான பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. ஆபத்தான இடங்கள் என கண்டறியப்பட்ட குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேவையான இடங்களுக்கு மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேரிடர் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் இதற்காக கட்டுப்பட்டு அறைகள் செயல்படுகின்றன.

கேள்வி:- முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

பதில்- மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. வாரந்தோறும் மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. 1 மாதத்துக்குள் மனுக்கள் மீது விசாரணை நடத்தி மனுதாரர்களுக்கு பதில் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்