வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா; சாமி குடை சரிந்ததில் கோவில் பட்டர்கள் 2 பேர் காயம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் சாலையின் குறுக்கே சென்ற தொலைத்தொடர்பு கம்பியில் சாமிக்கு பிடிக்கும் குடை சிக்கி சரிந்ததில் கோவில் பட்டர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-06-05 09:57 GMT

பிரம்மோற்சவ விழா

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந்தேதி கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, காலை, மாலை என இரு வேளைகளில் வரதராஜ பெருமாள் சிம்ம வாகனம், அம்சவாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சூரிய பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பாதம் தங்கிகள் எனும் கோடிகார தொழிலாளர்கள் தூக்கி செல்ல நாள்தோறும் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார்.

வாகனங்களில் உலா வரும் வரதராஜ பெருமாளுக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் வாகனத்தின் மீது நின்று குடை பிடித்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று சந்திர பிரபை வாகன உற்சவத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கங்கைகொண்டான் மண்டபத்திற்கு சென்று மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

2 பேர் காயம்

கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது சாமி வாகனத்தில் கோவில் பட்டாச்சாரியார்கள் சேஷாத்திரி, ராமபிரியன் இருவரும் குடை பிடித்தபடி வந்தனர். திருக்கச்சி நம்பி தெரு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் வந்தபோது சாலையின் குறுக்கே தாழ்வாக சென்ற தொலைத்தொடர்பு கம்பியில் குடை சிக்கி விழுந்தது. இருவரும் சுதாரித்து கொண்டு குடையை பிடிக்க முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து கம்பியை பிடித்தபடி வந்த சேஷாத்திரி பட்டரின் கட்டைவிரல் துண்டாகி ரத்தம் வடிய ஆரம்பித்தது. மேலும் மற்றொரு குடையை பிடித்த படி வந்த ராமபிரியன் பட்டரின் கையிலும் காயம் ஏற்பட்டது. கட்டை விரல் துண்டானதால் சேஷாத்ரி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு துண்டான கட்டைவிரலை தையல் போட்டு சிகிச்சை அளித்து கட்டு போட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

திருவிழா காலங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வாக உள்ள மின் கம்பிகள் மற்றும் மின்சார வயர்களை அப்புறப்படுத்த வேண்டும், அப்புறப்படுத்த முடியாத மின் வயர்களை சாமிக்கு முன்னால் சென்று, தூக்கிவிட பணியாட்களை நியமிக்க வேண்டும் இந்த முறை அவ்வாறு பணியாட்களை நியமிக்காமல் கோவில் நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் இது போன்ற விபத்து ஏற்பட்டுள்ளதாக கோவில் பட்டாச்சாரியார்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்