வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்கக்கூடாது -ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை அடுத்துள்ள பரங்கிமலையில் 41 ஆயிரத்து 952 சதுர அடி நிலம், தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அந்த இடத்தில் வன்னியர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு, மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்தநிலையில் நேற்று காலையில் வன்னியர் சங்க கட்டிடத்துக்கு அரசு சீல் வைத்தது.
இதை எதிர்த்து வன்னியர் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், "சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கி, சங்க கட்டிடத்தை கட்டினோம். அந்த கட்டிடம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியாக செயல்படுகிறது. எனவே, வட்டாட்சியர் நோட்டீசுக்கு தடை விதித்து, சீலை அகற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
மாணவர்கள்
இந்த வழக்கு அவசர வழக்காக தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, வக்கீல் கே.பாலு ஆகியோர் ஆஜராகி, "33 ஆண்டுகளாக இந்த நிலம் வன்னியர் சங்கத்தின் சுவாதீனத்தில் உள்ளது. இது கோவில் நிலம் என்று ஏற்கனவே அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது வருவாய்த்துறை நிலம் என்று சீல் வைத்துள்ளனர். சங்க கட்டிடத்தில் மாணவர்கள் பலர் தங்கியிருந்து போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களை வெளியேற்றிவிட்டு, கட்டிடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். எனவே, சீலை அகற்றி, அங்கு மாணவர்கள் தங்கி படிக்க அனுமதிக்க வேண்டும்'' என்று வாதிட்டனர்.
இடிக்கக்கூடாது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், "நிலத்தை விற்றதாக கூறப்படும் காமினி என்பவர் குத்தகைதாரர் தான். தற்போது, 6 மாணவர்கள் மட்டும் தங்கியுள்ளனர். அதில் 5 மாணவர்கள் தாம்பரத்தில் உள்ள விடுதிக்கு மாறிச் செல்ல சம்மதம் தெரிவித்தனர். ஒரு மாணவர் மட்டும் இதை ஏற்கவில்லை'' என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இருதரப்பினரும் தங்களிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே அங்கு நீடிக்க வேண்டும். அந்த கட்டிடத்தை இடிக்கக்கூடாது. விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.