'வந்தே பாரத்' ரெயிலுக்கு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நேற்று சேவையை தொடங்கிய ‘வந்தே பாரத்’ ரெயிலுக்கு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-11-11 18:43 GMT

சென்னை,

மைசூரு-சென்னை சென்டிரல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு ரெயில் நிலையத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயிலில் அதிகாரிகளும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்களும் பயணித்தனர்.

இந்த நிலையில் தென்கிழக்கு ரெயில்வே எல்லையை கடந்து தெற்கு ரெயில்வே எல்லையான ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு 'வந்தே பாரத்' ரெயில் மதியம் 2 மணியளவில் வந்தடைந்தது.

அப்போது சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சச்சின் புனிதா, தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரிகள் குகநேசன், ஓம் பிரகாஷ், ரவி உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் வாசுதேவன் தலைமையில் பா.ஜ.க.வினர் ரெயிலுக்கு மாலை அணிவித்து பூக்களை தூவியும் வரவேற்றனர். ரெயிலை வரவேற்க வந்திருந்த பள்ளி மாணவர்களுக்கு கோட்ட மேலாளர் சச்சின் புனிதா இனிப்புகளை வழங்கினார்.

செல்பி எடுத்து மகிழ்ச்சி

வந்தே பாரத் ரெயில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் சிறிது நேரம் நின்று சென்றது. அனைத்து ரெயில் நிலையங்களிலும் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ரெயிலிலில் பயணித்த அனைவரும் ரெயிலில் உள்ள சொகுசு வசதிகளை கண்டு பிரமித்து போயினர். செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதேபோன்று ரெயில் நிலையத்தின் வெளியே மற்ற ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளும் ரெயில் முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்த ரெயிலை வரவேற்பதற்காக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உள்பட உயர் அதிகாரிகள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 'வந்தே பாரத்' ரெயில் காட்பாடியை கடந்ததும், அரக்கோணம், ஆவடி, பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் கதவுகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி இந்த ரெயில் நிலையங்களில் மட்டும் கதவு திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்துக்குள் 'வந்தே பாரத்' ரெயில் இரவு 7 மணியளவில் வந்தடைந்தது. அப்போது பிளாட்பாரத்தில் பள்ளி மாணவர்கள் தேசிய கொடியுடன் அணிவகுத்து நின்று 'வந்தே பாரத்' ரெயிலை வரவேற்றனர். மங்கள இசையும் இசைக்கப்பட்டது. ரெயில் மீது பூக்களும் தூவப்பட்டன.

44 ரெயில் நிலையங்களில்...

இந்த ரெயிலை ஓட்டி வந்த லோகோ பைலட்டுகள் நடராஜன், மனோகரன், நவீன்குமார், ராஜேஷ் ஆகியோர் ரெயிலில் இருந்து இறங்கிய போது அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் வரவேற்றார். இதேபோன்று தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் மாவட்ட பொதுசெயலாளர் சென்னை சி.ராஜா உள்பட நிர்வாகிகளும் வந்தே பாரத் ரெயிலை வரவேற்றனர்.

இந்த ரெயிலை ஓட்டிய அரக்கோணத்தை சேர்ந்த லோகோ பைலட் நடராஜன் கூறும்போது, 'நான் சதாப்தி போன்ற அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கி இருக்கிறேன். ஆனால் அதை விட வேகத்திறன் அதிகமுடைய வந்தே பாரத் ரெயிலை இயக்கியது நெகிழ்ச்சியாக இருந்தது' என்றார்.

தென் இந்தியாவில் சேவையை தொடங்கிய முதல் நாள் என்பதால் 'வந்தே பாரத்' ரெயில் பெங்களூருவில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வரை உள்ள 44 இடங்களிலும் நின்று வந்தது. இதனால் இந்த ரெயில் 8 மணி நேரம் 30 நிமிடங்கள் நேற்று பயணத்தை மேற்கொண்டது.

'வந்தே பாரத்' ரெயிலின் சிறப்பு அம்சங்கள் என்ன?

* இந்தியாவின் மினி புல்லட் ரெயில் என்று வர்ணிக்கப்படும் 'வந்தே பாரத்' ரெயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

* ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் அலாரம், அவசர கதவு போன்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை பார்வையற்ற பயணிகளும் அறிந்துக்கொள்ளும் வகையில் பிரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

* விமான பயணத்தின்போது எத்தனை அடி உயரத்தில் விமானம் சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலை வெளியிடுவது போன்று 'வந்தே பாரத்' ரெயில் எத்தனை கி.மீ.வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற தகவல் டிஜிட்டல் திரையில் பதிவு செய்யப்படுகிறது.

* எங்கே ரெயில் சென்று கொண்டிருக்கிறது என்ற ரெயில் ரூட் மேப் ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் கண்ணில் பளிச்சென்று தெரியும் வகையில் டிஜிட்டல் திரையில் வெளியிடப்படுகிறது. தமிழ், கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய 4 மொழிகளில் அறிவிப்புகள் இடம்பெறுகின்றன.

* தொட்டால் எரியும் விளக்குகள், பட்டனை தாண்டினால் சாயும் இருக்கைகள், காலை வசதியாக வைத்துக்கொள்ள புஷ் அப்கள் என்று வசதிகள் நிறைந்துள்ளது.

* பயணிகள் பாதுகாப்புக்காக ஒவ்வொரு பெட்டியிலும் 2 இடத்தில் 360 டிகிரி கண்காணிப்பு கேமராவும், ரெயில் பெட்டியின் வெளியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர நேரங்களில் பயணிகள் ரெயில் டிரைவரை தொடர்புக் கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பயணிகளிடம் வரவேற்பு

சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து மைசூருவுக்கு இதுவரை 3 ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதாவது, சதாப்தி எக்ஸ்பிரஸ், மைசூரு எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை இயக்கப்பட்டது. தற்போது, இந்த பட்டியலில் புதிதாக வந்தே பாரத் சொகுசு ரெயிலும் இடம் பிடித்துள்ளது.

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் ஒப்பிடுகையில், வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி. இருக்கை வசதி கட்டணம் ரூ.75 குறைவு. அதே நேரத்தில், ஏ.சி. உயர் வகுப்பு இருக்கை கட்டணம் ரூ.315 அதிகம். நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, இன்று (சனிக்கிழமை) காலை மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயிலில், ஏ.சி. இருக்கை 189 எண்ணிக்கையிலும், ஏ.சி. உயர் வகுப்பு இருக்கை ஒன்றும் காலியாக இருந்தது. என்றாலும், அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளே இந்த அளவுக்கு டிக்கெட் விற்று தீர்ந்ததன் மூலம் பயணிகளிடம் வந்தே பாரத் ரெயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது உறுதியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்