வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா:அலகு குத்தி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழாவில் அலகு குத்தி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழாவில் அலகு குத்தி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கல்யாணம்
வால்பாறையில உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலின் 71 - ஆண்டு பங்குனி உத்திர திருவிழா 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் பங்குனி உத்திர திருவிழாவின் சிறப்பாக முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று நல்லகாத்து ஆற்றிலிருந்து முருக பக்தர்கள் அலகு குத்தியும் பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
திருவீதி உலா
மலைவாழ் கிராம மக்கள் 200 குடம் தீர்த்தம், பால் மற்றும் தேன் ஆகியவைகளை ஊர்வலமாக எடுத்து வந்து முருகனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக காலை 11 மணி முதல் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வால்பாறையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா, மகா அபிஷேகம் மற்றும் வானவேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது.