வேங்கடமங்கலம் கிராமத்தில் வலம்புரி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Update: 2023-09-03 08:04 GMT

வேங்கடமங்கலம்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் திருவேங்கட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் வலம்புரி கற்பக விநாயகர் கோவில் அமைக்க திருவேங்கட பெருமாள் கோவில் நிர்வாகிகள் மற்றும் வேங்கடமங்கலம் கிராம மக்கள் முடிவு செய்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வலம்புரி கற்பக விநாயகர் கோவில் கட்டும் பணி தொடங்கி தற்போது நிறைவடைந்தது.

இதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் வலம்புரி கற்பக விநாயகர் மற்றும் நவக்கிரக தெய்வங்களுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத்துறை தலைவர் ஆப்பூர் மதுசூதனன் முன்னிலையில் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு நேற்று 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை சிறப்பாக நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காலை 10.45 மணியளவில் மூலவர் வலம்புரி கற்பக விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 11 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை வேங்கடமங்கலம் திருவேங்கடப் பெருமாள் கோவில் நிர்வாகிகள், மற்றும் வேங்கடமங்கலம் கிராம மக்கள் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்