மறைந்த துரைக்கண்ணு சிலையை திறக்க தடை போட்டவர் வைத்திலிங்கம்

நான் முதல்-அமைச்சராக இருந்தபோது மறைந்த துரைக்கண்ணு சிலையை திறக்க தடை போட்டவர் வைத்திலிங்கம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;

Update: 2023-05-15 19:56 GMT

நான் முதல்-அமைச்சராக இருந்தபோது மறைந்த துரைக்கண்ணு சிலையை திறக்க தடை போட்டவர் வைத்திலிங்கம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

துரைக்கண்ணு சிலை திறப்பு விழா

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலத்தில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மார்பளவு உருவச்சிலை திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன் வரவேற்றார்.

விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு துரைக்கண்ணு மார்பளவு உருவச்சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

சிபாரிசுக்கு வந்ததில்லை

மறைந்த துரைக்கண்ணு எளிமையின் சிகரம். அமைச்சராக ஆன பிறகும் எளிமையில் இருந்து மாறவில்லை. மறைந்த ஜெயலலிதாவின் அன்பை பெற்று அமைச்சராகி சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதை கொள்ளை கொண்டவர். பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் எதை செய்கிறோமோ அது தான் நிலைத்து நிற்கும்.

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு வேளாண்மைத்துறையில் பல சாதனைகளை படைத்தவர். அவர் அமைச்சராக இருந்தபோது, தனக்காக எந்த வித சிபாரிசுக்காகவும் வந்ததில்லை. மக்கள் பிரச்சினைக்காக மட்டுமே என்னை அணுகுவார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நிறைய திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இதற்கு இந்த கூட்டமே சாட்சி.

தடைபோட்டவர் வைத்திலிங்கம்

துரைக்கண்ணு விட்டுச்சென்ற பணிகளை நாம் செய்ய வேண்டும். அவரது சிலையை நான் முதல்-அமைச்சராக இருந்தபோதே திறந்திருக்க வேண்டும். ஆனால் அந்த சிலையை திறக்கக்கூடாது என்று தடை போட்டவர் இதே மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இந்த சிலையை கூட திறக்க மனம் இல்லாத மனிதர் தான் வைத்திலிங்கம்.

ஒரு முறை அல்ல, பலமுறை என்னை துரைக்கண்ணு குடும்பத்தினர் சந்தித்து சிலையை திறக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். வைத்திலிங்கம் தடை போட்டதால் அன்றைக்கு சிலையை திறக்க முடியவில்லை. சிலையை திறக்க முடியவில்லையே என நான் வேதனைப்பட்டேன்.

மக்கள் மனதில் வாழ்கிறார்

ஆனால் நான் தான் இந்த சிலையை திறக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தியதால் அனைவருடைய பேராதவரோடு இந்த சிலையை திறந்துள்ளேன். கெட்ட எண்ணம் கொண்டவர் பெயர் இந்த திறப்பு விழாவில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சிலையை திறப்பதற்கு தடை விதித்ததாக நான் எண்ணுகிறேன். அனைத்திற்கும் மேல் ஆண்டவன் இருக்கின்றான். அவன் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டும் என நினைக்கிறானோ அப்போது தான் நாம் அதை செய்ய முடியும்.

இப்போது இந்த நேரத்தில் பொதுச்செயலாளராகி இந்த சிலையை திறந்துள்ளேன். ஆண்டவன் இப்போது தான் நல்ல வழியை காட்டியுள்ளான். துரைக்கண்ணு அமைச்சராக இருந்த போது இந்த தொகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட பல திட்டங்களை செயல்படுத்தியவர். விவசாய குடும்பத்தில் அவர் பிறந்ததால் விவசாயிகளின் தேவைகளை அறிந்து அவைகளை பெற்று தந்தவர்.

மக்கள் பணி தான் முக்கியம் என கொரோனா காலத்திலும் பல்வேறு இடங்களுக்கு சென்றவர். இவர் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது நினைவு நம்மிடத்தில் எப்போதும் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள்

விழாவில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பானுமதி துரைக்கண்ணு, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி.க்கள் பாரதிமோகன், குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவமணி, ராம்குமார், இளமதி சுப்பிரமணியன், பவுன்ராஜ், பாரதி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க முன்னாள் மத்திய சங்க செயலாளர் பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச்செயலாளர் கண்ணன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் கோவி.ஜெகநாதன், ஒன்றிய துணைச்செயலாளர் திலகவதி கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் சின்னப்பா, முருகன், எம்.ஜி.ஆர். இளைஞரணி ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன், பொதுக்குழு உறுப்பினர் மோகன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகதாஸ், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நற்குணன், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், அறிவழகன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் துரை.சண்முகபிரபு நன்றி கூறினார்.முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி செங்கோலை துரை.சண்முகபிரபு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்