வைகையா?... சாக்கடை கால்வாயா...? - பகிரங்கமாக கலக்கப்படும் கழிவுநீர்...!

வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரால் ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது.

Update: 2022-07-31 09:22 GMT

மதுரை,

மேக மலையில் மேகம் போல் தவழ்ந்து.. கம்பம் பள்ளத்தாக்கை நிரப்பி.. வருசநாடு குன்றுகளைக் குளிர்வித்து... மதுரையில் மகிழ்ச்சியாய்ப் பாய்ந்து... வடிகாலாய் வங்காள விரிகுடாவில் கலப்பவள் தான் இந்த வைகை.

மதுரையை செழிக்கச் செய்த வைகைக்கு கைம்மாறாக கடைக்கோடி வரை கலக்கப்படுவதெல்லாம் கழிவுநீர் தான். ஒரு காலத்தில் வைகை ஆற்றங்கரைகளெயெல்லாம் நிரம்பியிருந்த மணல் கபளீகரம் செய்யப்பட்டு, நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனது.

வைகை ஆறும் வறுமையில் தள்ளாடுகிறது... விளை நிலங்கள் வீடு மனைகளாகின... வயல்வெளிகள் வறண்டு விட்டன. பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் எஞ்சியுள்ள வைகை ஆற்றைப் பாதுகாக்க பொதுப்பணித்துறை கடைக்கண் கூட காட்டவில்லை என்பது பொதுமக்களுக்கு வேதனை அளிக்கிறது.

இரு கரைகளிலும் கால்வாய் கட்டி பாய விடப்படும் கழிவுநீரால், வைகை ஆறு முற்றிலும் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. செல்லூர் பந்தல்குடி கால்வாயில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகமான கழிவு நீரை சுத்திகரிக்க முடியாததால், கடந்த காலங்களைப் போலவே கழிவு நீர் வைகை ஆற்றில் பகிரங்கமாக திறந்து விடப்படுகிறது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருந்தும் வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரால் ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்