உயிரும் உடலும் இரண்டற கலந்ததே வாழ்க்கை என்பார்கள். ஆனால் வளர்ந்து வருகின்ற விஞ்ஞான உலகத்தில் செல்போனும் இணையதளமும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. உலகத்தில் எங்காவது ஒரு மூளையில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை கையடக்க செல்பேசியில் கண்இமைக்கும் வினாடிக்குள் அறிந்து கொள்ள இணையதளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அலுவலகங்கள் வீடுகள் தொழில் நிறுவனங்களில் வை-பை(அருகலை)அதிக அளவில் நிறுவப்பட்டு வருகிறது. அந்த வகையில் நூலகத்துக்கு வருகை தருகின்ற மாணவர்கள் வாசகர்கள் பயன்பெறும் வகையில் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2 ல் இலவச வை-பை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதில் அதிவேக பிராட்பேண்ட் இலவச வை-பை வசதி வழங்கப்பட்டு உள்ளது. வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வு தயாராகும் மாணவ-மாணவியர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தேவையான கோப்புகள் புத்தகங்கள் போன்றவற்றை இலவச வை-பை வசதியை பயன்படுத்தி எளிதாக பதிவிறக்கம் செய்து பயன் அடையலாம் என நூலகர் கலாவதி தெரிவித்தார்.மேலும் இணையதளத்தை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்துவதற்கு மாணவ-மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் சலுகை வழங்கப்பட உள்ளது. அத்துடன் மாணவ-மாணவியர் எளிதாக பயன்படுத்தும் வகையில் புத்தகங்களுக்கு வண்ணத்தாள் ஒட்டப்பட்டு வகுப்பு வாரியாக பிரித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நூலகர் மகேந்திரன், பிரமோத், அஷ்ரப், சித்திகா மற்றும் போட்டி தேர்வில் பயிற்சி பெறும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.