வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்: பக்தர்கள் பரவசம்

ஜோதி வடிவத்தில் காட்சி அளித்த வள்ளலாரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-25 01:44 GMT

கடலூர்,

உலகில் உள்ள மக்கள் அனைவரும் சமம். எல்லோரும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தி ஞானியாக விளங்கியவர் வள்ளலார் ஆவார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறான் என்றும், மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உனக்குள்ளே இருக்கும் ஜோதியை காண வேண்டும் என்பதை உணர்த்திய வள்ளலாரின் ஜோதி தரிசன விழா நடைபெற்றது.

வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இவர் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது.

இன்று காலை 6 மணிக்கு ஜோதி வடிவத்தில் காட்சி அளித்த வள்ளலாரை தரிசனம் செய்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என்று முழக்கமிட்டு வணங்கினர்.

ஜோதி தரிசனத்திற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்துள்ளனர்.

விழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீசார் 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஞானசபை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்