உத்தமபாளையம் பகுதியில்தோட்டங்களில் வாழைத்தார்கள் வெட்டி கடத்தல்:2 பேர் கைது; கார் பறிமுதல்

உத்தமபாளையம் பகுதியில் தோட்டங்களில் வாழைத்தார்களை வெட்டி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-16 18:45 GMT

வாழைத்தார் கடத்தல்

உத்தமபாளையம் பகுதியில் அதிக அளவில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. இங்குள்ள தோட்டங்களில் தற்போது வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த தோட்டங்களில் கடந்த ஒரு மாதமாக நள்ளிரவில் வாழைத்தார்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. நள்ளிரவில் கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் நபர்கள் தோட்டங்களுக்குள் புகுந்து வாழைத்தார்களை வெட்டி கடத்தி செல்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாரிடம் விவசாயிகள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர். ஆனால் போலீசாரால் திருட்டு கும்பலை பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் நள்ளிரவில் தாங்களே களமிறங்கி திருடர்களை பிடிக்க முடிவு செய்தனர். இதனால் தோட்டங்களில் இரவு நேரம் மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உத்தமபாளையம்- கோம்பை சாலையில் வாழைத்தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதியில் கார் ஒன்று அடிக்கடி சென்று வந்தது. இதை தோட்டங்களில் மறைந்திருந்த விவசாயிகள் கண்காணித்து வந்தனர். அப்போது காரில் வந்து இறங்கிய கும்பல் ஒன்று ஒரு தோட்டத்திற்குள் புகுந்து வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்து காரில் ஏற்றி கொண்டிருந்தனர். இதற்கிடையே விவசாயிகள் செல்போன் மூலம் ஒருவருக்கொருவர் தகவல் கொடுத்து ஒன்று கூடினர். அந்த கும்பல் கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

பின்னர் விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து கடத்தலில் ஈடுபட்ட கம்பம்- கோம்பை ரோட்டை சேர்ந்த யோகேஸ்வரன், சுருளிப்பட்டியை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதைக்கண்டதும் கார்களில் வாழைத்தார்களை ஏற்றி கொண்டிருந்த சிலர் தப்பி ஓடினர். பின்னர் பிடிப்பட்ட 2 பேரையும் உத்தமபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார், வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்