15 கோவில்களில் இருந்து உற்சவர்கள் தேர்பவனி

கிருஷ்ணகிரி நவராத்திரி விழாவையொட்டி 15 கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தேர்பவனி நடந்தது.

Update: 2023-10-25 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நவராத்திரி விழாவையொட்டி 15 கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தேர்பவனி நடந்தது.

நவராத்திரி விழா

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழாவையொட்டி கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு பழையப்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சாமி, சீனிவாச பெருமாள், தஞ்சாவூர் மாரியம்மன், அங்காளம்மன், தர்மராஜா கோவில் தெரு முத்துமாரியம்மன், டி.பி., ரோடு பட்டாளம்மன் உள்ளிட்ட 15 கோவில்களில் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சாமிகள் அலங்கரித்து வைக்கப்பட்ட பல்லக்கில் தேர் பவனி சென்றது.

10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

அனைத்து தேர்களும் நேற்று காலை 7.30 மணிக்கு பழையப்பேட்டை காந்தி சிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மேலும் பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர். இதில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த வன்னி மரத்தின் இலைகளை வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம் என்பதால், இலைகளை பெற கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்