கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்து பயன்பெறலாம்விவசாயிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் சி.பழனி அறிவுரை கூறியுள்ளார்.;
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள், கோடை உழவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்வதன் மூலம் மேல் மண்ணை கீழாகவும், கீழ்மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிப்பதோடு, மழைநீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறங்கி மழைநீரை சேமிக்க கோடை உழவு உதவுகிறது.
விவசாயிகள் பயன்பெறலாம்
மேலும் பயிரின் வேர் நன்கு ஆழமாக செல்ல கோடை உழவு செய்தல் வேண்டும். மண்ணில் உள்ள நோய் கிருமிகளும், பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப்புழுக்களும் நிலத்தில் உள்ள களைச்செடிகளின் விதைகளும் வெளியே தள்ளப்பட்டு வெயிலின் தாக்கத்தால் அழிக்கப்பட்டு நடப்பு சாகுபடி பருவத்தில் பூச்சிநோய் தாக்குதலை குறைக்க உதவுகிறது. கோடை உழவு உழும்போது பயிரின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலிருந்து பயிருக்கு எளிதில் கிடைக்க உதவுகிறது. இதுதவிர மண் அரிமானத்தை கட்டுப்படுத்தி மண்ணிலுள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் விரயமாவதை தடுக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் அனைவரும் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.