கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன- தமிழக அரசு
மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று துவங்கப்பட உள்ளது.;
சென்னை,
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை எனவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் விண்ணப்பிக்க இதுவரை முகாம்கள் நடத்தப்பட்டன.
சிறப்பு முகாம்களும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகளுக்கு தகுந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று துவங்கப்பட உள்ளது.