ஒரத்தூர் நீர்த்தேக்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
ஒரத்தூர் நீர்த்தேக்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் ஒரத்தூர் கிராமத்தில் இருந்து அடையாற்றுற்கு செல்லும் ஒரத்தூர் கிளை ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்த நீர்த்தேக்கம் ஒரத்தூர் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்தூர் அணைக்கட்டை இணைத்து 1.35 டி.எம்.சி கொள்ளளவுடன் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தினால் சென்னை பெருநகருக்கு அல்லது புறநகருக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க இயலும். குடிநீர் பயன்பாட்டில் சுமார் 12 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் நீர்த்தேக்கம் பணி முடிவடையாததால் கடந்த ஆண்டு பெய்த மழையில் நீர்த்தேக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஏரியின் கரை 2 முறை உடைந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் நீர்த்தேக்கம் பகுதியில் கட்டப்பட்டுள்ள நீர் செல்லும் வாய்க்கால்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் 2½ ஆண்டுகளாக நீர்த்தேக்க கட்டுமான பணி முடிவடையாமல் கிடப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒரத்தூர் நீர்த்தேக்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க அரசு ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.