கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி 16-ந் தேதி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம்; விவசாய சங்கங்கள் முடிவு
கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி 16-ந் தேதி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளது.
மலைக்கோட்டை:
ஆலோசனை கூட்டம்
கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இருந்தும் தமிழகத்திற்கான காவிரி நீர் வழங்காததால், டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகியதுடன், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் நேற்று நடைபெற்றது.இதில் ஒரு சில சங்கங்கள் தவிர மற்ற அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டும் காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை தராத கர்நாடகா அரசை கண்டித்தும், காவிரி நீரை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், தமிழகத்தில் விரைவில் பந்த் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முற்றுகை போராட்டம்
இந்த போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து போராட்ட தேதியை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடாத கர்நாடக அரசை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் வன்மையாக கண்டிக்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் குறுவை சாகுபடி செய்த 3.5 லட்சம் ஏக்கருக்கும் உரிய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாத கர்நாடகாவுக்கு செல்லும் நெய்வேலி, கூடங்குளம் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 16-ந் ேததியன்று நெய்வேலியில் உள்ள நிலக்கரி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது. இதற்கு அனைத்து அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆதரவு அளிக்க வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாய சங்க நிர்வாகிகள்
இதில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் சுப்பிரமணியம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு இயக்க செயலாளர் சுந்தர விமல்நாதன், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க கூட்டியக்க தலைவர் காளிமுத்து, இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் தனபதி, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில செயலாளர் சந்திரசேகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சங்கர் அய்யா, நீர்ப்பாசன குழு தலைவர் நாகராஜன் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.