யோகாசனம் செய்து அசத்திய மாணவ-மாணவிகள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Update: 2022-06-21 17:55 GMT

ராமேசுவரம், 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

யோகா தினம்

நாடு முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபத்தின் முன்பு பதஞ்சலி யோகா மையத்தின் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண மடத்தின் சாமி நியமானந்தா, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பவுண்டேசன் நிர்வாகி சேக்சலீம், சமூக ஆர்வலர்கள் சுடலை, பாரதிராஜன், அருள்மணி மற்றும் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் மற்றும் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், பத்மாசனம், மயூராசனம் உள்ளிட்ட பலவிதமான யோகாசனங்களை செய்து அசத்தினார்கள். தொடர்ந்து 10 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்தரத்தில் தொங்கியபடி பலவித யோகாசனங்கள் செய்து அசத்தினர்.

ஆக்கி மைதானம்

இதேபோல, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி தேசிய மாணவர் படை சார்பாக யோகா பயிற்சி நடைபெற்றது. தேசிய மாணவர் படை அலுவலர் டாக்டர் உத்திரசெல்வம் ஏற்பாட்டின்பேரில் தேசிய மாணவர் படையினர், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆக்கி மைதானத்தில் ராமநாதபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை, தரணி இயற்கை வேளாண்மை கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பாக யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் மனவளக் கலைமன்ற யோகா வல்லுநர் பேராசிரியர் ஆர்.முருகேசன் அனைவருக்கும் யோகா பயிற்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ராமேசுவரம்

இதேபோல் ராமேசுவரத்தில் பசுமை ராமேசுவரம் அமைப்பின் சார்பில் நடந்த யோகா நிகழ்ச்சியில் துணை சூப்பிரண்டு ராஜு, கோவில், நகர், துறைமுகம் போலீஸ் நிலையங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் கலந்துகொண்டு யோகா செய்தனர். காவல் துறைக்கான இந்த யோகா பயிற்சியை வர்ஷாமதன் யோகா பயிற்றுனராக செயல்பட்டார்.

அதுபோல் ராமேசுவரம் நீதிமன்ற வளாகத்தில் வாழும் கலை அமைப்பின் ரவிசங்கர் குருஜி ஆலோசனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நீதிபதி இளையராஜா, வக்கீல் சங்கத் தலைவர் ஜோதிமுருகன் உள்ளிட்ட ஏராளமான வக்கீல்களும் கலந்து கொண்டனர். இந்த யோகா பயிற்சியை ராமநாதபுரம் பாண்டியராஜன், முருகேசன், தேவதாஸ் ஆகியோர் வழங்கினர்.

பொந்தம்புளி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு யோகா ஆசிரியர் ஹெக்டேஜி தலைமை தாங்கினார். இதில் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

மண்டபம்

மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் நடந்த யோகா தினத்தை முன்னிட்டு கடலோர காவல்படை வீரர்கள் பலவிதமான யோகாசனங்கள் செய்தனர். கமாண்டோ வீரர்களுக்கான யோகா பயிற்சியை யோகா ஆசிரியர் ஹெக்டேஜீ செய்து காண்பித்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் களஞ்சியம், பசுமை ராமேசுவரம் திட்ட பொறுப்பாளர் சரசுவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதுபோல் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடந்த யோகா நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்