கலெக்டர் அலுவலகத்தில் பறந்த ஐக்கிய நாடுகள் சபை கொடி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் சபை கொடி பறந்தது.
2-ம் உலகப்போருக்கு பின்னர் நாடுகள் இடையே அமைதி ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் போர்களை தடுப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபை 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் அக்டோபர் 24-ந்தேதி ஐக்கிய நாடுகள் சபை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஐ.நா.சபை தினமான நேற்று காலை வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கொடி மற்றும் அதன் அருகே ஐக்கிய நாடுகள் சபை கொடி ஆகியவற்றை கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் பாலமுருகன் ஏற்றினார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் கம்பீரமாக பறந்த 2 கொடிகளையும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ரசித்து பார்த்தபடி சென்றனர். மாலை 6 மணியளவில் தேசிய கொடியுடன், ஐ.நா.சபை கொடியும் இறக்கப்பட்டது.