ஊராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 6 ஊராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 6 ஊராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருங்கிணைப்பு கூட்டம்
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற தலைப்பில் வருகிற மே மாதம் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை ஊராட்சிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் ஜோதி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி தலைவர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் மங்கலம் ஊராட்சி தலைவர் மூர்த்தி, 'ஒன்றிய ஆணையாளரிடம், ஊராட்சி பகுதிக்கு ஆய்வுக்கு வரும்போது தலைவர் என்ற முறையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தால் ஆய்வின்போது உடனிருப்போம். மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கும்போது அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை' என்று கூறினார். ஆனால் இதற்கு முறையாக பதில் அளிக்காமல் ஒன்றிய ஆணையாளர் கூட்ட அரங்கில் இருந்து சென்று விட்டதாக தெரிகிறது.
உள்ளிருப்பு போராட்டம்
இதைத்தொடர்ந்து, உரிய பதில் அளிக்காமல் சென்ற ஒன்றிய ஆணையாளரை கண்டித்து ஊராட்சி தலைவர்களான மூர்த்தி (மங்கலம்), மயூரி பிரியா நடராஜ் (முதலிபாளையம்), சரவணன் (பட்டம்பாளையம்), முருகேசன் (வள்ளிபுரம்), சுலோச்சனா (பொங்குபாளையம்), சாந்தாமணி (பெருமாநல்லூர்) ஆகியோர் கூட்டம் நடந்த அறையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறும்போது, 'ஒன்றிய ஆணையாளர் ஊராட்சிக்கு ஆய்வுக்கு வரும்போது தகவல் தெரிவிப்பதில்லை. அதுபோல் பணிகள் குறித்து கேட்க செல்போனில் தொடர்பு கொண்டாலும் செல்போனை எடுப்பதில்லை. கூட்டத்தில் கேள்வி கேட்டதும் பதில் தெரிவிக்காமல் எழுந்து சென்றுவிட்டார். இது எங்களை அவமதிப்பது போல் உள்ளது. ஒன்றிய ஆணையாளரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்' என்றனர்.
அதிகாரிகளிடம் புகார்
இதுகுறித்து ஒன்றிய ஆணையாளர் ஜோதி கூறும்போது, 'ஊராட்சிக்கு ஆய்வுக்கு செல்லும்போது ஊராட்சி தலைவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. எங்களிடம் தெரிவித்து விட்டுத்தான் ஊராட்சிக்கு வர வேண்டும் என்பதை போல் அவர்கள் கூறுகிறார்கள். அதிகாரி என்ற முறையில் நான் ஆய்வுக்கு சென்று வருகிறேன். இதுதொடர்பாக கூட்டம் முடிந்ததும் தெரிவித்தார்கள். எனது அறைக்கு வந்து பேசலாம் என கூறி வந்துவிட்டேன்' என்றார்.
பின்னர் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவரும், இடுவாய் ஊராட்சி தலைவருமான கணேசன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடம் பேசினார். பின்னர் இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோரிடம் ஊராட்சி தலைவர்கள் மனு கொடுத்து புகார் தெரிவித்தனர்.