'தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்' மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தென்சென்னை தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசினார்.;
சென்னை,
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் இந்த கட்சிகளின் தலைமையில் செயல்படும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநில கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அந்த அடிப்படையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்தார்.
அன்றைய தினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்களை அவர் சந்தித்து பேசினார்.
நேற்று சென்னை பல்லாவரத்தை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் எப்படி பணியாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி
கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது மின்சாரம் தடைபட்டது. இந்த இருளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இந்த மின் தடை, தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருள் சூழ்ந்துள்ளது என்பதையே காட்டுகிறது. அந்த இருளை விரட்டி விரைவில் நாம் ஒளியேற்றுவோம்.
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு இன்று முதலே நாம் அனைவரும் பாடுபட வேண்டும். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அளவில் மட்டும் நீங்கள் இருந்துவிடக் கூடாது.
'பூத்' கமிட்டி
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அந்த நீட் தேர்வை தமிழில் எழுத முடியும் என்ற நிலையை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. இவ்வாறு தமிழ் மொழி வளர்ச்சிக்கு நாம் செய்த திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
தென்சென்னை தொகுதியில் 55 சதவீதம்தான் பூத் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 138 பூத்களில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஜூலை 30-ந் தேதிக்குள் 100 சதவீதம் பூத் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். பூத் கமிட்டியை நம்பிதான் கட்சி செயல்படுகிறது. எனவே, பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
பாராட்டு
தொகுதி பணிகளை சிறப்பாக மேற்கொண்ட ஒன்றிய தலைவர்கள் சிவக்குமார் (திருவான்மியூர்), செந்தில்குமார் (பள்ளிக்கரணை), ஜெகநாதன் (துரைப்பாக்கம்) ஆகியோருக்கு அமித்ஷா பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் வரவேற்றார். கூட்ட முடிவில் தென்சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, மாநில செயலாளரும், தென்சென்னை பா.ஜ.க. பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியில் பேசிய அமித்ஷாவின் பேச்சை, மாநில செயலாளர் மீனாட்சி மொழிபெயர்த்தார். அவ்வப்போது இந்த மொழிபெயர்ப்பை அண்ணாமலை சரி செய்தார்.
பகல் 11.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து மண்டபத்தில் உள்ள தனி அறையில் அமித்ஷா மதிய உணவை முடித்துக்கொண்டு 2.15 மணிக்கு அங்கிருந்து வேலூர் புறப்பட்டு சென்றார்.