சீரமைக்கப்படாத பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை

வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படாததால் விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

Update: 2023-04-10 18:05 GMT

தேசிய நெடுஞ்சாலை

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை 226 விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலை விரிவாக்கத்தின் போது எந்த நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. இந்த சாலையின் இருபுறமும், இருசக்கர வாகனம் செல்லும் அளவிற்கு ரோடு புதிதாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஏற்கனவே உள்ள சாலையில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது பெரம்பலூர்-அரியலூர் சாலை, ஆத்தூர்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உடன் இணைத்து நெடுஞ்சாலை 136 என மாற்றப்பட்டது.

பெரம்பலூர்-அரியலூர் நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றன. தனியார் சிமெண்டு ஆலைகளை சேர்ந்த ஏராளமான லாரிகள் மூலப்பொருட்கள் மற்றும் சிமெண்டு மூட்டைகளையும், சிமெண்டு பவுடர்களை ஏற்றிச் செல்லவும், டிப்பர் லாரிகளில் கருங்கல், ஜல்லிக்கற்கள், மணல் ஏற்றி செல்லவும் இயக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூரை சேர்ந்த ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வேலைக்குச் செல்லவும், விவசாய நிலங்களுக்குச் செல்வதற்கும் இந்த பிரதான சாலையை பயன்படுத்துகின்றனர்.

சாலை சமமாக இல்லை

இந்த தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால், பெரம்பலூர் டவுன் பகுதி உள்ள 4 ரோடு சந்திப்பு சாலை அரியலூர் முன்பாக உள்ள அல்லிநகரம் வரையில் மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், இந்த சாலையில் செல்லும்போது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச்செல்வதால், சாலை மிகவும் மோசமாக மாறி வருகிறது. பல இடங்களில் சாலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. இதனால் சாலை சமமாக இல்லை. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், ரோட்டை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். தார்சாலையில் மேடு, பள்ளங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையின்போது பெரம்பலூர்-அரியலூர் சாலையில் பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் தற்காலிகமாக சரி செய்தனர்.

ஆனால் தற்போது மீண்டும் அந்த சாலை பழுதடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. உடனடியாக புதிய தரமான சாலை அமைக்க வேண்டும். மேலும் லாரிகளில் இருந்து சாலைகளில் விழும் ஜல்லிக்கற்கள், சிமெண்டு பவுடர்களை அப்புறப்படுத்தவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்தும், சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

தேவையே இல்லாத தடுப்பு சுவர்

பெரிய வெண்மணியை சேர்ந்த சமூக ஆர்வலர் வரதராஜன்:- பெரம்பலூர்-அரியலூர் இடையே உள்ள நெடுஞ்சாலை மிக மோசமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக ரோடு சீராக இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையானது மழைக்காலங்களில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஒதியம் பஸ் நிறுத்தத்தில் சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைத்திருக்கிறார்கள். இந்த தடுப்பு சுவர் அமைத்த பிறகு விபத்துகள் மேலும் அதிகரிக்கிறது.

தேவையே இல்லாத இந்த தடுப்பு சுவரை முழுமையாக அகற்றுவதோடு, சட்ட விதிகளை பின்பற்றாமல் முறையின்றி அமைக்கப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள பேரளி சுங்கச்சாவடியின் எஞ்சியுள்ள பகுதிகள் மற்றும் கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி அப்பகுதியில் சாலையை சரி செய்ய வேண்டும். பெரம்பலூரில் இருந்து அரியலூர் வரை மேடு பள்ளமாக இருக்கின்ற அனைத்து இடங்களிலும் புதிய சாலை அமைக்க வேண்டும். இந்த சாலை விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்ட நிழற்குடைகளுக்கு பதிலாக புதிய நிழற்குடைகளை அமைக்க வேண்டும்.

சுத்தம் செய்வதை உறுதி...

குன்னத்தை சேர்ந்த வேன் டிரைவர் கண்ணதாசன்:- பெரம்பலூர்-அரியலூர் சாலையை பல்வேறு தேவைகளுக்காக தினமும் பல்வேறு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையின் பல இடங்கள் மேடு பள்ளங்களாக உள்ளதால் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை நிறுத்தி பழுது பார்ப்பதற்கு கூட பயமாக இருக்கிறது. ஜல்லி, மணல் போன்றவற்றை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் இருந்து விழும் சிறு கற்கள் போன்றவை இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கண்களில் விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக கோரிக்கை வைத்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையில் விழும் ஜல்லிக்கற்கள், மணல் போன்றவற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருத்தத்தை ஏற்படுத்துகிறது

ஒதியத்தை சேர்ந்த சரவணன்:- இந்த சாலையில் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. சீரற்ற இ்ந்த சாலையில், பல இடங்களில் சாலையோர பகுதிகள் இருக்கிறதா? இல்லையா? என்றே தெரியாத அளவில் உள்ளது. இதுகுறித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்த பிறகும் கூட இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் பகுதியில் உள்ள கற்கள், மண் உள்ளிட்டவைகளை அகற்றாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த சாலையில் குடும்பத்தோடு பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித பயத்துடனேயே பயணிக்கும் சூழல் நிலவுகிறது. சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் வந்தபோது சில இடங்களில் சாலை சீர்படுத்தப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் எஞ்சியுள்ள பகுதிகள் சீரமைக்கப்படவில்லை. குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என பல தரப்பினரும் பயணிக்கும் இந்த சாலையை சீரமைக்கவும் மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகமும், மத்திய-மாநில அரசுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வெட்டி வீழ்த்தப்பட்ட புளிய மரங்கள்

ஓலைப்பாடியை சேர்ந்த பழனிவேல்:- 7 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில அரசிடம் இருந்து சாலையை பெற்று புதிதாக எந்த நிலத்தையும் கையகப்படுத்தாமல் இருபுறமும் சிறிது சேர்த்து இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலையோரம் இருந்த பல புளிய மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டன. இவ்வாறு வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக ஒரு மரத்திற்கு 10 மரக்கன்றுகள் வீதம் நட்டு பராமரிக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள போதும் நடவு செய்யப்பட்ட பல மரக்கன்றுகள் இன்று உயிரோடு இல்லை.

காலநிலை மாற்றம் தொடர்பாக உலகமே பேசி வரும் வேளையில் வளர்ச்சிக்காக பல்வேறு பலன்களை தரும் மரங்கள் வெட்டப்படுவது வருத்தமளிப்பதாக உள்ளது. ஆகையினால் சாலை விரிவாக்கம் செய்யப்படும்போது வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மண், மனிதன், பல்லுயிர்கள், சுற்றிச்சூழல் என அனைத்திற்கும் பலன் தரும் புளி, இலுப்பை, நாவல், வேம்பு, அத்தி, அரசு, வில்வம் உள்ளிட்ட மரங்களை நடவு செய்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேலும் எஞ்சியுள்ள சாலையோர மரங்கள் அவ்வப்போது பட்டுப்போகிறது. அதற்கான காரணத்தை ஆராய்ந்து கண்டறிவதோடு மரங்களில் ஆணியடித்து விளம்பரப் பதாகைகள் வைப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்