கூட்டுக் குடிநீர் குழாய் பதித்தபோது பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் உடைப்பு
திருப்பத்தூரில் மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாய் பதித்தபோது வீடுகளில் இருந்து வரும் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாய் பதித்தபோது வீடுகளில் இருந்து வரும் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராட்சத குழாய் பதிப்பு
மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை ரோடு வழியாக புதுப்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டை ரோட்டில் இன்று ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டியபோது வீட்டில் இருந்து வெளியே வரும் பாதாள சாக்கடை குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளது.
சிறை பிடிப்பு
இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பணிகளை தொடர்ந்து செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி கவுன்சிலர் பிரேம்குமார் தலைமையில் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்து பொக்லைன் எந்தித்தை சிறைப்பிடித்தனர்.
மேலும் உடைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொக்லைன் எந்திரம் சிறை பிடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.