கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு

Update: 2023-08-19 15:47 GMT


உடுமலையை அடுத்த விளாமரத்துட்டியைச் சேர்ந்தவர் கணபதி (வயது 73). விவசாயி. இவர் நேற்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றார். பின்னர் கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என்று கணபதி எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி கிணற்றிக்குள் விழுந்து விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் நிலைய அதிகாரி தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் குறைவான அளவே தண்ணீர் இருந்ததால் கணபதி தத்தளித்தவாறு இருந்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி கணபதியை கயிற்றின் மூலமாக பத்திரமாக மீட்டனர். கிணற்றை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரிய வந்தது.

மேலும் செய்திகள்