பராமரிப்பு இல்லாத ரவுண்டானா

Update: 2022-05-30 18:46 GMT

உடுமலை:

உடுமலையில் உள்ள ரவுண்டானாவை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ரவுண்டானா

உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக பழனி சாலை, பொள்ளாச்சி சாலை, ராஜேந்திரா சாலை, பை-பாஸ்சாலை, அனுஷம்சாலை மற்றும் ஐஸ்வர்யா நகர் செல்லும் சாலை ஆகிய6சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் தானியங்கி சிக்னல் செயல்பாட்டில் இருந்தபோது விபத்துகள் நடக்கவில்லை. ஆனால் தற்போது சிக்னல் இல்லாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தானியங்கி சிக்னல் பயன்பாட்டில் இருந்தபோது, அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தனர்.ஆனால் இப்போது வாகன தணிக்கையின்போதும் மற்றும் சில நேரங்களில் மட்டுமே அங்கு போலீசார் இருக்கின்றனர்.

பழனி சாலையில் இருந்து வரும் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்திற்குள் செல்வதற்கு ரவுண்டானாவை ஒட்டிதான் செல்லவேண்டும். அவ்வாறு செல்லும்போது மத்திய பஸ்நிலையத்திற்குள் ஏற்கனவே டவுன்பஸ்கள் மற்றும் பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் அதிகமாக நின்றிருக்கும் பட்சத்தில், பழனி சாலையில் இருந்து வரும் பஸ் ஒருசில நிமிடங்கள் ரவுண்டானா அருகே சாலைப்பகுதியை ஒட்டிநிற்க வேண்டியதாகிறது. அப்போது அந்த இடத்திலேயே பஸ்சில் இருந்து பயணிகள் இறங்குகின்றனர். அதனால் ரவுண்டானா பகுதியில், விபத்துகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அங்கு ஓரிரு போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பராமரிக்க வேண்டும்

ரவுண்டானா அமைக்கப்பட்டதுடன் சரி, அழகுபடுத்தப்படவில்லை. ரவுண்டானாவிற்குள் ஆங்காங்கு குழிகளாக உள்ளது.அத்துடன் புல் செடிகள் வளர்ந்து, தற்போது காய்ந்த நிலையில் உள்ளது.மேலும் ரவுண்டானாவிற்குள் அரசியல் கட்சியினர் அவ்வப்போது பிளக்ஸ் பேனர்களையும் வைக்கின்றனர்.

இந்த ரவுண்டானாவின் உள்பகுதியை சுத்தம் செய்து, பூச்செடிகளை வளர்த்து அழகுபடுத்தி, பராமரிக்க வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்