நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தர சான்றிதழ் -உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவுத்தர சான்றிதழ் வழங்குகிறார்.;
சென்னை,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழு இயக்கத்தின் வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள், வங்கி கடன் இணைப்புகள், சுய தொழில் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கி கொடுக்கப்படுகின்றன.
வங்கியாளர் விருது
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக்குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கி கடன் இணைப்பு, நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தர சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம், பணி நியமன ஆணைகள், சுய உதவி குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கி கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.