சனாதனம் பற்றி கருத்து கூற உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு-கே.எஸ்.அழகிரி பேட்டி

சனாதனம் பற்றி கருத்து கூற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.;

Update: 2023-09-04 19:52 GMT

"சனாதனம் பற்றி கருத்து கூற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;-

உரிமை உண்டு

சனாதனத்தை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன கருத்து பா.ஜனதாவை அலறடித்து உள்ளது. பெரியார், மு.கருணாநிதி ஆகியோர் சொன்னதை தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லியுள்ளார். அவர் எந்த தவறான வாதத்தையும் முன்வைக்கவில்லை. சனாதனத்திற்கு எதிரான கருத்து என்பது இந்து மதத்துக்கு எதிரான கருத்து அல்ல. மகாத்மா காந்தியே தீண்டாமை ஒரு பாவம் என்று சொன்னார். சனாதனம் பற்றி கருத்து கூற உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவரக்கூடிய சர்வாதிகார நடவடிக்கை. இதனை கொண்டு வந்தால் தோல்வி தான் அடைவீர்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டம்- ஒழுங்கு

தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கட்சிக்காரர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என்றார்.

பேட்டியின்போது முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி.ராமசுப்பு, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்