உதயகிரி கோட்டை சிறுவர் பூங்கா ரூ.32 லட்சத்தில் புனரமைப்பு

உதயகிரி கோட்டை சிறுவர் பூங்கா ரூ.32 லட்சத்தில் புனரமைக்கப்படுகிறது. இதை நகரசபை தலைவர் அருள் சோபன் ஆய்வு செய்தார்.;

Update: 2023-05-16 19:15 GMT

தக்கலை:

உதயகிரி கோட்டை சிறுவர் பூங்கா ரூ.32 லட்சத்தில் புனரமைக்கப்படுகிறது. இதை நகரசபை தலைவர் அருள் சோபன் ஆய்வு செய்தார்.

உதயகிரி கோட்டை

தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சியில் உதயகிரி கோட்டை உள்ளது. 98 ஏக்கர் நிலப்பரப்பை சுற்றி உள்ள இந்த கோட்டை மன்னர் மார்த்தாண்டவர்மா ஆட்சியின்போது கட்டப்பட்டதாகும், மன்னர்கள் ஆட்சிக்கு பிறகு இங்கு 2000-ம் ஆண்டு மான் பூங்கா அமைக்கப்பட்டது.

அதன்பிறகு பல்லுயிரின பூங்காவாக மாற்றப்பட்டு தற்போது மயில், பறவை, நட்சத்திர ஆமைகள் உள்ளன. மேலும் மரக்குடில், மீன்காட்சியகம், சிறுவர் பூங்கா என பல்வேறு அம்சங்கம் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த கோட்டையின் உள்புறம் திருவிதாங்கூர் தளபதி டிலனாய் கல்லறையும் உள்ளது. இதை தொல்லியல் துறையினர் பாதுகாத்து வருகிறார்கள்.

சிறுவர் பூங்கா

உள்ளூர் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை பராமரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் பொழுதுபோக்குவதற்கான எந்த அம்சமும் இல்லை என குறைபட்டு சென்றனர்.

சிறுவர் பூங்காவில் உள்ள குறைகள் குறித்து 'தினத்தந்தி'-யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சிறுவர் பூங்காவை புனரமைக்க பத்மநாபபுரம் நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, சிதைந்துபோன விளையாட்டு உபகரணங்களை மாற்றிவிட்டு புதிய உபகரணங்களை ஏற்படுத்துவது, கழிவறை, சுற்றுசுவர், நடைபாதை, இருக்கை போன்ற வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.32. லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்துவருகிறது.

இந்த பணிகளை நகரசபை தலைவர் அருள் சோபன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆய்வின்போது ஆணையர் லெனின், பணி மேற்பார்வையாளர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்