புதிய நடைமுறையை பின்பற்றி தட்டச்சு தேர்வை நடத்தலாம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

புதிய நடைமுறையை பின்பற்றி தட்டச்சு தேர்வை வருகிற 13-ந் தேதிக்குள் நடத்தலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2022-10-21 18:35 GMT

புதிய நடைமுறையை பின்பற்றி தட்டச்சு தேர்வை வருகிற 13-ந் தேதிக்குள் நடத்தலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தட்டச்சு தேர்வில் மாற்றம்

தமிழகத்தில் தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு தாள்-1, தாள்-2 என்று 2 நிலைகளில் நடத்தப்படும்.

கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள்-1 வேக தேர்வு, தாள்-2 ஸ்டேட்மெண்ட்-லெட்டர் தேர்வு என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பானது இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1 ல் லெட்டர்-ஸ்டேட்மெண்ட், தாள்-2 ல் வேகத்தேர்வு என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பழைய நடைமுறையிலேயே தட்டச்சு தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தனி நீதிபதி தடை

அதை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் பழைய முறைப்படி தாள்-1ல் வேகத்தேர்வும், தாள்-2ல் லெட்டர்-ஸ்டேட்மென்ட் தேர்வும் நடைபெறும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து திருச்சி தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன்குமார் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார்.

ஏற்கனவே இதை விசாரித்த ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், தட்டச்சு தேர்வு தொடர்பான தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் குறிப்பிட்ட தேதியில் அந்த தேர்வு நடத்துவது நிறுத்தப்பட்டது.

புதிய நடைமுறையை பின்பற்றலாம்

இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் தட்டச்சு தேர்வை புதிய முறைபடி தாள்-1ல் லெட்டர்-ஸ்டேட்மெண்ட் தேர்வும், தாள்-2ல் வேகத் தேர்வும் இருக்கும் வகையில் நவம்பர் 13-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்