பஸ்கள் நிற்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ள இருசக்கர வாகனங்கள்
பஸ்கள் நிற்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ள இருசக்கர வாகனங்கள்
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ள இரு சக்கர வாகனங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
புதிய பஸ் நிலையம்
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை போன்ற பல்வேறு மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு என பல பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் போக்குவரத்து புதிய பஸ் நிலையத்தில் மிகுதியாக இருந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்களை காட்டிலும் தனியார் பஸ்களே அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.எனவே, தஞ்சை மாவட்ட பொதுமக்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு செல்வதற்கு புதிய பஸ் நிலையத்தை நம்பியே உள்ளனர். இந்த பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இதர வசதிகளான அரசு போக்குவரத்து அலுவலகம், உதவி மையம், இருசக்கர வாகன நிறுத்துமிடம், ஓட்டல்கள், கடைகள், கழிப்பறை மற்றும் குளியலறைகள் செயல்பட்டு வருகிறது.
ஆக்கிரமித்துள்ள மோட்டார்சைக்கிள்
இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் வெளியூர்களிலிருந்து தஞ்சைக்கு வரும் பஸ்கள் மற்றும் தஞ்சையிலிருந்து இதர ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வரும்போது அதற்குரிய நிறுத்தத்தில் நிற்க முடியாமல் திணறி வருகின்றன. ஏனென்றால் அங்கு உள்ள நிறுத்தத்தில் இரு சக்கர வாகன ஒட்டிகள் தங்களது மோட்டார்சைக்கிள்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் பஸ் டிரைவர்கள் பஸ்சை எங்கே நிறுத்துவது என்று தெரியாமல் கிடைக்கும் இடங்களில் பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விட்டு செல்கின்றனர், அவ்வாறு பஸ் நிற்கும் போது பின்னால் வரும் அடுத்தடுத்த பஸ்களுக்கு இடம் கிடைக்காமல் பஸ் டிரைவர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றார்கள்.இதனால் பயணிகளும் தன்னுடைய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதற்குரிய இடங்களில் இல்லாததால் அந்த பஸ்சை தேடி அலைவதுடன் நேரமும் விரயமாக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில் பஸ்களையும் தவற விட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தஞ்சை புதிய பஸ் நிலைய பஸ் நிறுத்தத்தில் மோட்டார்சைக்கிள்கள் நிறுத்துவதை முறைப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.