துறைமங்கலத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 பேர் போலீசில் ஒப்படைப்பு
துறைமங்கலத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது. இதையடுத்து, 5 பேரை பிடித்து பொதுமக்கள் போலீசில ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் துறைமங்கலம் சிவன் கோவில் அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு, பின்னர் அந்த இருசக்கர வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க பணம் கேட்ட போது பொதுமக்களால் கையும், களவுமாக பிடிப்பட்டார். பின்னர் அவரை பொதுமக்கள் பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் துறைமங்கலத்தில் கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வரும் வாலிபர் ஒருவர் நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை திருடியுள்ளார். அந்த காட்சி அதே பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததால், அவரை விசாரிக்க பொதுமக்கள் அந்த கோழி இறைச்சி கடைக்கு சென்றிருந்தனர். அப்போது அந்த வாலிபரும், அவருடன் இருந்த மேலும் 4 வாலிபர்களும் வயல் வழியாக தப்பி செல்ல முயன்ற போது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசாரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை பிடித்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். இது தொடர்பாக அந்த 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.