2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
பணி நேரத்தில் நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற போலீஸ்காரர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.;
திருவாரூர்;
பணி நேரத்தில் நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற போலீஸ்காரர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புகார் மனு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அய்யப்பன்(வயது 30). இவர் கடந்த மாதம் அரசலாற்று பாலம் அருகே இறந்து கிடந்தார். அய்யப்பன் இறந்து சில நாட்கள் கழித்து 2 போலீஸ்காரர்கள் மற்றும் அய்யப்பன் உள்பட 5 பேர் ஒரு சினிமா பாடலுக்கு நடனமாடுவது போல் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.இந்த வீடியோவை கொண்டு அய்யப்பன் சாவில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் புகார் மனு கொடுத்தனர்.
பணியிடை நீக்கம்
இந்த வீடியோ மற்றும் புகார் மனு குறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் பேரளம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலா்களாக பணிபுரியும் மணிகண்டன், பிரபு ஆகிய 2 பேரும் பணி நேரத்தில் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு நடனமாடியது தெரிய வந்தது.பணி நேரத்தில் உரிய அனுமதியின்றி தனிப்பட்ட நபரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதால் மணிகண்டன், பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.