டியூட்டி டிராபேக் சதவீதத்தை உயர்த்த வேண்டும்

Update: 2023-04-19 15:41 GMT


ஆயத்த ஆடைகளுக்கான டியூட்டி டிராபேக் சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் குழுவினர், டியூட்டி டிராபேக் கமிட்டியிடம் கோரிக்கை வைத்தனர்.

டியூட்டி டிராபேக் சதவீதம்

ஆயத்த ஆடைகளுக்கு வழங்கப்படும் டியூட்டி டிராபேக் சதவீதத்தை மாற்றியமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் உள்ள ஏ.இ.பி.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு டியூட்டி டிராபேக் தலைவர் பிள்ளை தலைமை தாங்கினார். கமிட்டி உறுப்பினர்கள் பாண்டே, கவுதம் ராய், மலாய் சமீர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஏ.இ.பி.சி.யின் தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி, ஆலோசனைக்குழு உறுப்பினர் பரமசிவம், ஏ.இ.பி.சி. பொதுச்செயலாளர் மிதிலேஷ்வர் ஆகியோர், ஆயத்த ஆடைகளுக்கான டியூட்டி டிராபேக் விகிதத்தை உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார்கள்.

ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

ஆயத்த ஆடை ரகங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் டியூட்டி டிராபேக்கை ஒரு சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். பருத்தி இழையுடன் இரண்டு செயற்கை இழை கலந்து தயாரிக்கப்படும் ஆயத்த ஆடை ரகங்களுக்கான டியூட்டி டிராபேக்கை 1½ சதவீதம் உயர்த்த வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் கமிட்டியினருக்கு உரிய விளக்கத்தையும் ஏற்றுமதியாளர்கள் அளித்தனர்.

தங்கள் கோரிக்கையை கமிட்டி பரிசீலிக்கும், ஆயத்த ஆடைகளுக்கான டியூட்டி டிராபேக் உயர்த்தப்படும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்