அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் தூத்துக்குடி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை இன்றி மூளைக்கட்டி அகற்றம்
ஒமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில், அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை இன்றி மூளைக்கட்டி அகற்றப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்டம் கீழா இரால் பகுதியை சேர்ந்தவர் பச்சைபாண்டியன். இவருடைய மனைவி பொண்ணுத்தாய் (வயது 56). இவருக்கு கடந்த சில நாட்களாக தலை சுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது. அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், குணமாகாததால், மேல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பொண்ணுத்தாயின் மூளையில் சிறிய கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த கட்டியை அறுவை சிகிச்சை இன்றி எஸ்.ஆர்.எஸ். எனும் உயர் தொழில்நுட்ப கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் திட்டமிட்டனர்.
அதன்படி புற்றுநோய் கதிர்வீச்சுத்துறை தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில், புற்றுநோயியல் டாக்டர்கள், மருத்துவ இயற்பியலாளர்கள், கதிர்வீச்சு தொழில் நுட்பவியலாளர்கள் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் என 15 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறுவை சிகிச்சை அரங்கம், மயக்க மருந்து இல்லாமல் அதிநவீன மென்பொருள் மூலம் மிகத் துல்லியமாக மூளைத்திசுக்கள் மற்றும் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படாத வகையில் கதிர்வீச்சு சிகிச்சை செய்து மூளையில் இருந்த கட்டியை அகற்றினர்.
இந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொண்டால் ரூ.4 லட்சம் வரை செலவாகும் எனவும், இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது அந்த பெண் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.