தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடலுக்குள் காற்றாலை அமைக்க நடவடிக்கை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடலுக்குள் காற்றாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடலுக்குள் காற்றாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் கூறினார்.
பேட்டி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை, ஆயுஷ் துறை மந்திரி சர்பானந்த சோனாவால் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து துறைமுகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்று முனையமாக மாற்றுவது தொடர்பாக தனியார் நிறுவனங்களிடம் விருப்பம் கேட்டு உள்ளோம். இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இதனை செயல்படுத்த முன்வரும் பட்சத்தில் திட்டம் நிறைவேற்றப்படும்.
கடலுக்குள் காற்றாலை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் பெரிய துறைமுகமாக மாறும். மத்திய அரசின் துறைமுக மசோதா, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய துறைமுகங்களை பாதிக்கும் என்று தமிழக முதல்-அமைச்சர், 10 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த மசோதாவால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. தமிழக அரசிடம் இருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
வ.உ.சி. துறைமுகத்தில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக டென்மார்க், நார்வே நாடுகளை சேர்ந்த எனர்ஜி ஏஜென்சிகளுடன் துறைமுக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ரூ.1.46 லட்சம் கோடி
சாகர் மாலா திட்டத்தில் தமிழகத்தில் ரூ.1.46 லட்சம் கோடி மதிப்பில் 109 திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் ரூ.33 ஆயிரத்து 730 கோடி மதிப்பிலான 43 திட்டங்கள் முடிக்கப்பட்டு உள்ளன. ரூ.64 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 திட்டங்கள் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மீதமுள்ள 38 பணிகளும் பல்வேறு நிலைகளில் உள்ளன.
மேலும் வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சீபிளேன் இயக்குவதற்காக, விமான நிறுவனத்தினரிடம் விருப்பம் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.