தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய செவிலியர் குடியிருப்பு, வெளிநோயாளிகள் பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய செவிலியர் குடியிருப்பு, வெளிநோயாளிகள் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

Update: 2023-09-29 18:45 GMT

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டுள்ள புதிய செவிலியர் குடியிருப்பு, வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அமைச்சர்கள் ஆய்வு

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடியே 35 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் உயர் மருத்துவ சிகிச்சைக்கான பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

செவிலியர் குடியிருப்பு திறப்பு

பின்னர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 6 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ள 6 துணை சுகாதார நிலையங்கள், 2 வெளிநோயாளிகள் பிரிவு, ஒரு செவிலியர் குடியிருப்பு கட்டிடம், ஒரு சுகாதார ஆய்வகம், ஒரு கண் அறுவை சிகிச்சை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து, நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

விருதுகள்

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 253.29 கோடி செலவில் சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்பட பல்வேறு மருத்துவ கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் 708 நகர்ப்புற நலவாழ்வு மைய பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 22 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு 10 மையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு உள்ளன. ரூ.4.25 கோடி செலவில் 12 மையங்களுக்கான கட்டிட பணிகள் நடந்து வருகின்றன. தேசிய தர உறுதி நிர்ணய திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு இதுவரை 478 விருதுகள் கிடைத்து உள்ளன. இதில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 239 விருதுகள் கிடைத்து உள்ளது. மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு இதுவரை 77 விருதுகள் கிடைத்து உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 43 விருதுகள் கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக மருத்துவ கட்டிடப்பணிகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று மாண்புமிகு சமூக நலன்மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வநாயகம், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம்ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (பொறுப்பு) சி.அகத்தியன், இணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) பொற்செல்வன் (தூத்துக்குடி), குணசேகரன் (கோவில்பட்டி), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான்தோழன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்

அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று மதியம் விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஆஸ்பத்திரியில் 30 ஆண்டுகள் பழமையான எக்ஸ்ரே எந்திரம் செயல்படாமல் இருப்பதை பார்வையிட்ட அமைச்சர், உடனடியாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நல்வாழ்வுத்துறை அலுவலக அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு, புதிதாக எக்ஸ்ரே எந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கு, உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, மருந்தகம், சமையல் கூடம், மருத்துவமனை வளாகம் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டார். சிறிது நேரம் உள்நோயாளிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் மருத்துவ அலுவலர் சுரேஷ்குமாரிடம் ஆஸ்பத்திரியிலுள்ள மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் காலி பணியிடங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய கட்டிட வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்