உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி மாணவிகள் சாதனை
உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தமிழக தடகள சங்கத்தின் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35-வது 20 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டி நடந்தது. இதில் வ.உ.சி. கல்லூரியில் படிக்கும் மாணவி சஹானா கலந்து கொண்டு முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் பரிசு பெற்றார். அதேபோன்று விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஆலிஸ் தேவ பிரசன்னா 16 வயதுக்கு உட்பட்ட உயரம் தாண்டுதல் போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள் சஹானாவையும், ஆலிஸ்தேவ பிரசன்னா மற்றும் இவர்களுக்கு பயிற்சி அளித்த தூத்துக்குடி மாவட்ட முன்னாள் விளையாட்டு அதிகாரி பேட்ரிக் வின்சென்ட் ஆகியோரை வ.உ.சி கல்லூரியின் செயலர் ஏ..பி.சி.வி சொக்கலிங்கம், வ.உ.சி.கல்லூரியின் முதல்வர் வீரபாகு, மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தினராஜ், தூத்துக்குடி மாவட்ட தடகள செயலாளர் பழனிச்சாமி மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.
இவர்கள் 2 பேரும் அடுத்த மாதம் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தேசிய தடகளப் போட்டியில் தமிழகத்தின் சார்பாக பங்கு பெற உள்ளனர்.