தூத்துக்குடி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வாக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வாக்குப்பதிவு வௌ்ளிக்கிழமை நடக்கிறது.

Update: 2023-06-20 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திட்டமிடும் குழு

தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஊரக பகுதிக்கு 7 உறுப்பினர்களும், நகரப்பகுதிக்கு 5 உறுப்பினர்களும் ஆக மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. அதன்படி வேட்பு மனுதாக்கல் நடந்தது. இதில் ஊரகப்பகுதிக்கு மாவட்ட பஞ்சாயத்து 9-வது வார்டு உறுப்பினர் ரா.அருண்குமார், 10-வது வார்டு செல்வக்குமார், 1-வது வார்டு உறுப்பினர் கு.ஞானகுருசாமி, 4-வது வார்டு த.தங்கமாரியம்மாள், 11-வது வார்டு ந.பாலசரசுவதி, 2-வது வார்டு யு.மிக்கேல் நவமணி, 16-வது வார்டு ஜெ.ஜெசிபொன்ராணி ஆகிய 7 பேர் மட்டும் மனு தாக்கல் செய்தனர். இதனால் 7 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவு

நகர்ப்புற பகுதிக்கு 5 உறுப்பினர் பதவிக்கு கயத்தார் பேரூராட்சி 3-வது வார்டு கோ.அய்யாத்துரை, கோவில்பட்டி நகராட்சி 21-வது வார்டு தா.உலகராணி, தூத்துக்குடி மாநகராட்சி 32-வது வார்டு அ.கந்தசாமி, திருச்செந்தூர் நகராட்சி 1-வது வார்டு ஆ.பூ.ரமேஷ், விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டு மு.ராமலட்சுமி, சாத்தான்குளம் பேரூராட்சி 4-வது வார்டு செ.ஜோசப் ஆகிய 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 5 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்துஅரங்கில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிவடையும். அதன்பிறகு எந்த வாக்காளரும் வாக்களிக்க அனுமதிக்க இயலாது. நகர்ப்புற பகுதி வாக்குப்பதிவுக்கு திட்டக்குழு தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வாக்களிக்கலாம். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்களால் வழங்கப்பட்ட அடையாள சான்றுடன் வந்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம். அடையாள சான்று இல்லாமல் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வாக்கு எண்ணிக்கை

வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் நியமனம் தொடர்பாக உரிய படிவத்தை வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த உடன், வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்