தொழில்நுட்ப கோளாறு: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
கூடங்குளம் அணுமின் நிலைய எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் பழுதினால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 2-வது அணு உலையில் உள்ள டர்பைன் எந்திரத்தில் இன்று காலை திடீரென்று தொழில்நுட்ப கோளாறால் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு உலை எந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் டர்பைனில் ஏற்பட்ட பழுதை சரி செய்த பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.
2-வது அணு உலையில் உள்ள எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. முதலாவது அணு உலையில் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.