போடிச்சிப்பள்ளி ரெயில்வே சுரங்கப்பாதையில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதால், போடிச்சிப்பள்ளி ரெயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-10-09 18:45 GMT

ராயக்கோட்டை:

தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதால், போடிச்சிப்பள்ளி ரெயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ரெயில்வே சுரங்கப்பாதை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது போடிச்சிப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.

இந்த ஊராட்சியில், கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு மாதிரி பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே போல ஊராட்சி மன்ற அலுவலகமும் அங்கு உள்ளது. இந்த பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மாதிரி பள்ளியில் கெலமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் நாள்தோறும் இந்த ரெயில்வே சுரங்கப்பாதையின் வழியாக சென்று வருகிறார்கள்.

பராமரிப்பு இல்லை

இந்த பாதை உரிய பராமரிப்பின்றி உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் முழுவதும் தேங்கி விடுகிறது. மேலும் சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் கனரக வாகனங்கள் இந்த சுரங்கப்பாதையில் செல்லும் போது சேற்றில் சிக்கி விடுகின்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொக்லைன், கிரேன் போன்றவற்றை கொண்டு வந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்ள அரை நாள் ஆவதால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது மழைக்காலமாக உள்ள நிலையில் வாரத்திற்கு 2,3 நாட்கள் இந்த பிரச்சினை நிலவுவதாக அந்த பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கூறினார்கள்.

குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவ, மாணவிகள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் சிக்கி கொண்டால் அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல போடிச்சிப்பள்ளி சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் பயன்படுத்த கூடிய சாலையாக இது உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது.

இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

தண்ணீரை திருப்பிவிட வேண்டும்

ஊராட்சி செயலாளர் ராஜூ:-

இந்த ரெயில்வே பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த பாலத்தின் கீழ் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே பாலத்தின் அடியில் மழைநீர் தேங்காத வகையில் கால்வாய் வெட்டி தண்ணீரை திருப்பி விட வேண்டும். மேலும் தற்போது உள்ள சாலையை எடுத்து விட்டு, புதிதாக கனரக வாகனங்கள் சென்றாலும் உடையாத வகையில் சாலையை தரமாக போட வேண்டும். மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியும் ஆகாத வகையில் சாலை அமைக்க வேண்டும்.

போடிச்சிப்பள்ளி விவசாயி சம்பங்கி:-

இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் இந்த சாலையில் ஒரு வாகனங்கள் சிக்கி கொள்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மழைக்காலத்தில் வரக்கூடிய தண்ணீர் இந்த பாலத்தின் அடியில் தேங்கி நிற்கிறது. எனவே இந்த பகுதி மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நலன் கருதி, இந்த பாலத்தின் கீழ் உள்ள சாலையை சீரமைத்து தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்