லாரி, டிராக்டர், சரக்கு வேன் அடுத்தடுத்து மோதல்; தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்

திண்டுக்கல் அருகே 4 வழிச்சாலையில் லாரி, டிராக்டர், சரக்கு வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-27 21:00 GMT

திண்டுக்கல் அருகே 4 வழிச்சாலையில் லாரி, டிராக்டர், சரக்கு வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அடுத்தடுத்து மோதல்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள முருகம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் மாட்டுச்சாணம் அள்ளுவதற்காக நேற்று அதிகாலை 5 மணி அளவில் கனகராஜ் தனது டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மனைவி லீலா, அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில்குமார் ஆகியோரும் சென்றனர்.

முருகம்பட்டியில் இருந்து திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. சின்னாளப்பட்டி அருகே அவர்கள் வந்தபோது, மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த சரக்கு டிரைலர் சாலையின் குறுக்கே நின்றது. மேலும் அதன் அருகில் டிராக்டர் மீது மோதிய லாரி நின்றது.

3 பேர் படுகாயம்

அந்த நேரத்தில் மதுரையில் இருந்து பழனி நோக்கி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வேன் ஒன்று டிராக்டரின் டிரைலர் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. டிராக்டர் மீது லாரியும், சரக்கு வேனும் அடுத்தடுத்து மோதிய இந்த விபத்து சில வினாடிகளில் அரங்கேறியது.

இந்த விபத்தில் டிராக்டரில் வந்த கனகராஜ், அவரது மனைவி லீலா மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி, டிராக்டர், சரக்கு வேன் ஆகியவை அடுத்தடுத்து மோதிய சம்பவம் சின்னாளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்