தொப்பூர் கணவாய் அருகே லாரி-டீசல் டேங்கர் லாரி மோதி விபத்து - 5 பேர் காயம்
தொப்பூர் கணவாய் அருகே லாரி-டீசல் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.;
நல்லம்பள்ளி,
ஆந்திரா மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு கல் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக இன்று காலை வந்தது.
லாரியை சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார்(37) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது தொப்பூர் இரட்டை பாலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்ற டேங்கர் லாரியின் பின் பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் எதிர் திசையில் உள்ள சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சுமார் 10 அடி பள்ளத்தில் லாரி மற்றும் டீசல் டேங்கர் லாரியும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் சுரேஷ்குமார்(37), கோவை மாவட்டத்தை சேர்ந்த டீசல் டேங்கர் லாரி டிரைவர்கள் சிவராஜ்(55), சரவணக்குமார்(31) மற்றும் டீசல் டேங்கர் லாரியில் இருந்த 2 பேர் உட்பட மொத்தம் 5 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.