திருத்தணி அருகே லாரி- கார் மோதல்; தி.மு.க. பிரமுகர் பலி
திருத்தணி அருகே லாரி- கார் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலியானார்.;
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் குபேந்திரன் (வயது 45). இவர் திருவள்ளூர் பகுதியில் சினிமா திரையங்கு, விடுதி, உள்ளிட்டவற்றை நிர்வகித்து வந்தார். தி.மு.க. பிரமுகரான இவருக்கு ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே சொந்தமான நிலம் உள்ளது. இந்தநிலையில் நேற்று குபேந்திரன் காரில் புத்தூருக்கு தனது விவசாய நிலங்களை பார்வையிட சென்றார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளூரில் உள்ள வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி குபேந்திரனின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த குபேந்திரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுக்குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் குபேந்திரனின் உடலை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.