100 நாள் வேலைத்திட்டத்தில் வரும் புகார்களை விசாரிக்க டி.ஆர்.ஓ. தலைமையில் குழு -கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

100 நாள் வேலைத்திட்டத்தில் வரும் புகார்களை விசாரிக்க டி.ஆர்.ஓ. தலைமையில் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

Update: 2023-04-20 21:15 GMT


100 நாள் வேலைத்திட்டத்தில் வரும் புகார்களை விசாரிக்க டி.ஆர்.ஓ. தலைமையில் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

முறைகேடுகள்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்கு பொறுப்பாளராக இருப்பவர் விதிகளை மீறி பல மாதங்களாக அந்த பணியில் நீடித்து வருகிறார்.

மேலும் 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றுபவர்களை தனிநபர்களுக்கு சொந்தமான நிலங்களில் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறார். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது, தவறான வழிமுறையாகும்.

இதுசம்பந்தமாக உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

சுற்றறிக்கை

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, 100 நாள் வேலைத்திட்ட முறைகேடுகளை தவிர்க்க ஜி.பி.எஸ். கருவியை பயன்படுத்துவது சாத்தியமா என கேள்வி எழுப்பியது. அதற்கு வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் அரசு வக்கீல் திலக்குமார் ஆஜராகி, 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

இதை பதிவு செய்த ஐகோர்ட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்தநிலையில் அந்த தீர்ப்பை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் பிறப்பித்து உள்ளனர். அதில் கூறியிருந்ததாவது:-

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்ட முறைகேடு குறித்த மனுதாரரின் புகாரை மாவட்ட கலெக்டர் 12 வாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களை அனைத்து கிராமங்களில் அமல்படுத்த வேண்டும். இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின்படி அனைத்து ஊர்களிலும் பணிகள் நடப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதை அவ்வப்போது கலெக்டர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

டி.ஆர்.ஓ. தலைமையில் குழு

இந்த திட்டத்திற்கான செயலி மூலம் வருகைப்பதிவை உறுதி செய்து, பணியாளர்களுக்கான சம்பளத்தை ஆதார் அட்டையின் மூலம் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும். 100 நாள் திட்டத்தின் பயன்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்.

கிராமப்புற பொதுமக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள் போன்றவற்றை இத்திட்டத்தின் கீழ் புதுப்பித்த பிறகு, ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கிறது.

ஆக்சிஜனை வழங்குதல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தட்பவெப்ப நிலையை மேம்படுத்துதல், நீரைப் பாதுகாத்தல், மண்ணைப் பாதுகாத்தல் மற்றும் வனவிலங்குகளை ஆதரிப்பதில் மரங்கள் நீண்ட காலத்துக்கு சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கின்றன.

எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் வரும் புகார்களை விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.) பதவிக்கு குறையாத அதிகாரியை நியமித்து குழுவை ஏற்படுத்தி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்