வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர் திருவீதி உலா
தைப்பூச திருவிழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேத உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளினார்.;
சிங்கம்புணரி
பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியருக்கு தைப்பூச திருவிழா அன்று பாலாற்றில் தீர்த்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேத உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளினார்.
பிரான் மலையில் இருந்து முட்டக்கட்டி வழியாக மேலப்பட்டி வழியாக மதுரை மாவட்ட எல்லையான பள்ளபட்டி வரை சுமார் 7 கி.மீ.் தூரம் சப்பர திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் மேலப்பட்டியில் உள்ள குன்றக்குடி தேவஸ்தானத்துக்கு கட்டுப்பட்ட தோப்பில் அமைந்துள்ள மண்டபத்தின் பின்புறம் பாலாற்றில் வேல் கொண்ட சிவசுப்பிரமணியருக்கு தீர்த்த வாரி உற்சவம் நடைபெற்றது.
பிரான்மலை ஐந்து கோவில் தேவஸ்தானத்தை சேர்ந்த உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் வேலுக்கு தீர்த்தவாரி பூஜை நடத்தினர். அதனைத் தொடர்ந்து குன்றக்குடி தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு சப்பரத்தில் மீண்டும் மேலப்பட்டி வழியாக பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.